ஒவ்வொரு வெளிநாட்டுப் பல்கலையும், தனக்கென தனித்தனி சேர்க்கை விதிமுறைகளைக் கொண்டிருந்தாலும், சில விதிமுறைகள் அனைத்திற்கும் பொதுவானவையாக உள்ளன. அந்தப் பொதுவான அம்சங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, * இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு, நீங்கள் எந்த நாட்டு பல்கலைக்கு விண்ணப்பம் செய்கிறீர்களோ, அந்நாட்டில் அங்கீகரிக்கத்தக்க பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பொதுவாக, CBSE, IB போன்ற நிலையிலான பள்ளி படிப்புகள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. உங்களின் பள்ளிப் படிப்பு ஆவணங்களைப் பொறுத்தவரை, மதிப்பெண்களுடன், இதர திறன் சான்றுகளும் இருந்தால், அதற்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். * அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு செல்லும்போது ஆங்கிலத்திறமை என்பது மிகவும் முக்கியம். எனவே, TOEFL மற்றும் IELTS போன்ற தேர்வுகளை எழுதி, தேவையான மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். * பொறியியல் படிக்க வேண்டுமெனில், பள்ளிப் படிப்பில் கணிதம் இருக்க வேண்டியது கட்டாயம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், சில பல்கலைக்கழகங்கள் இந்த கணிதத்துடன், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற பாடங்களும் கட்டாயம் என்கின்றன. இந்தியாவில் வணிகப் படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவில் இளநிலை கணினி அறிவியல் படிப்பை மாணவர்கள் தேர்ந்தெடுத்துப் படிப்பதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. * பெரும்பாலான வெளிநாட்டுப் பல்கலைகள், SAT1 மற்றும் SAT2 தேர்வில் மாணவர்கள் தேறியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. குறிப்பாக அமெரிக்க கல்வி நிறுவனங்கள் இத்தகைய தேர்வுகளை மாணவர்கள் எழுதுவதை ஒரு பொதுத் தகுதியாகவேப் பார்க்கின்றன. * எந்த வெளிநாட்டு பல்கலைக்கழகமும், மாணவரின் மதிப்பெண் பட்டியலோடு, அவரின் தனித்திறன் சான்றிதழ்களையும்(Certificate of extra curricular activities) முக்கியமாகக் கருதுகின்றன. எனவே, வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று கனவு காணும் மாணவர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். * சில நாடுகளில், இளநிலை பட்டப்படிப்பில் சேர, குறைந்தபட்ச வயது 18 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |